Wednesday, June 3, 2009

தினம் ஒரு தகவல் - இரவு நேரம்!

என்
ஓட்டைக் குடிசைக்குள்
நிலவின்
ஒளிபுகும் நேரமெல்லாம்
நான்
ஏட்டைக் கையில் பிடித்து
தமிழ்ப்
பாட்டை எழுதிக்கொண்டிருப்பேன்!

தனிமை
எனக்கு இனிமையானது!
தனிமைதான் எனக்குள்
தமிழ் சுரக்கும் நேரம்!

உலகம் உறங்கும் நேரம்
எனக்கு
உறக்கம் கலையும் நேரம்!
இரவுகளைக்கூட
உறங்க விடாது
நான்
கவிதைகளை பிரசவிக்கும்
களிப்பான நேரம்!

பகலில் உடைபட்ட
என்
உணர்ச்சிக் குமிழிகளை
இரவில்
கற்பனை ஊசியால்
கவிதை நூல் கொண்டு
தைக்கும் நேரம்!

Tuesday, June 2, 2009

தினம் ஒரு தகவல் - எண்ணியதை அடைதல்

கடல்வழிப் பயணம் ஒரு கனவாக இருந்த காலத்தில் அதை நனவாக்கும் வெறியில் புறப்பட்டார் கொலம்பஸ். பக்கத் துணையாக பயணிகள் வரவில்லை. கொள்ளையர்களும், குற்றவாளிகளும் அனுப்பப்பட்டனர். பாதி வழியில் பிரச்சனை பிறந்தது. உணவுப் பொருட்களைப் பாதுகாத்து வந்த ரொனால்ட் என்பவன் அதிர்ச்சியை அறிவித்தான். கைவசம் உள்ள உணவு ஊர் திரும்ப மட்டுமே போதுமானது, மேற்கொண்டு பயணம் தொடர்ந்தால் ஒவ்வொரு நாளும் திரும்புவதற்கான உணவு தீர்ந்து போவதால் கப்பலைத் திருப்புவோம் புறப்பட்ட இடமே போய்ச் சேர்வோம் என்றான். உடனிருந்த மாலுமிகள் ஆம் ஆம் என்றனர். கொலம்பஸின் கப்பல் கவிழவில்லை. கப்பல் பயண லட்சியம் கவிழ ஆரம்பித்தது. கொலம்பஸின் கூற்று அவர்கள் பய மண்டையில் ஏறவே இல்லை. கொலம்பஸ் கைதானார். ரொனால்ட் தலைமை ஏற்றான். கொலம்பஸ் அசரவில்லை.

ஒரு புதுக்கணக்கு சொன்னார். திரும்பும் நாட்களில் கொலம்பஸீக்கு ஒதுக்கப்பட்ட மொத்த உணவை மற்றவர் எல்லோரும் பங்கிட்டுக் கொள்ளலாம். பட்டினி கிடக்கத் தான் தயார். அந்த உணவு துணை கொண்டு ஒரு நாளோ இரு நாளோ திட்டமிட்டபடி மேலே பணம் தொடர்வோம், திரும்ப வேண்டாம் என்று கெஞ்சினார். அது நியாயமாக்கப்பட்டது. பயணம் தொடர்ந்தது. அடுத்த இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள் அமெரிக்கக் கடற்கரை அவர்களுக்குத் தட்டுப்பட்டது. முடியாததை முடித்தார். முடிசூடிக் கொண்டார்.

இவ்வாறு எண்ணியதை எண்ணியவாறு அடைவதை திருவள்ளுவர் ‘வினைத்திட்பம்’ அதாவது ‘மனஉறுதி’ என்னும் அதிகாரத்தில் மிகவும் அழகாக கூறுகிறார்.

எண்ணிய எண்ணியாங்கு எய்துப, எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்.

விளக்கம்: ஒன்றைச் செய்ய எண்ணியவர் அதைச் செய்து முடிப்பதற்கு ஏற்ற மனஉறுதியை உடையவராக இருப்பதால், அடைய நினைத்தவற்றை எல்லாம் அவர் எணணப்படியே அடைவர்

தினம் ஒரு தகவல் - பாத்திரம் அறிதல்

உதவி வேண்டும் என்று மகாராஜாவிடம் யாசகம் கேட்க ஒரு ஞானி போனார். அவர் பிராத்தனையில் இருப்பதாகவும் ஞானி மட்டும் உள்ளே போகலாம் என்றும் அனுமதி தந்தார்கள். அரசர் “ஆண்டவரே… என் தேவைகள் பெருகி விட்டன. இன்னும் பொன்னும் மணியும் நாடும் கொடு” என்று பிராத்தனையைய் முடித்தார். உதவி கேட்டு வந்த ஞானி விருட்டென்று அரசரிடம் எதையும் கேட்காமல் வெளியே புறப்பட்டார். அரசர், “சுவாமி உங்களுக்கு என்ன வேண்டும்?” என்றபடி பின்னால் வந்தார். “வேண்டாம்… நீயே பிச்சைக்காரன்… உன்னிடம் நான் ஏன் பிச்சை எடுக்க வேண்டும். நேராகக் கடவுளிடமே பிச்சை கேட்டுக் கொள்வேன்” என்றபடி வேகமாகப் போய்விட்டார்.

கடவுள் மேல் பாரத்தைக் போட்டுவிட்டால் கஷ்டம் தெரியாது. இறைவன் தரும் இன்பம், உலகம் தரும் இன்பத்தைவிட உயர்வாகவே இருக்கும்.

Saturday, May 30, 2009

தினம் ஒரு தகவல் - மனதை ஆய்வு செய்தல்

மனதை பற்றி ஆய்வு செய்ய அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஏசலன் என்ற நிறுவனம் முடிவு செய்தது. அதன்படி வன்முறையைய் மிகவும் விரும்பும் மனம் கொண்டவரின் கண்களை கட்டி விட்டு, எதிரில் தலையணையைய் வைத்து இதை எதிரி என்று நினைத்து குத்தச் செய்தது. முதலில் குத்த நினைத்த மனிதர் பிறகு சற்று யோசித்து சிரித்தார்… தலையணையைய் எப்படி குத்துவது? என்று. இந்த தலையணைக்கும், ரத்தத்தில் உருவான மனிதனுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்று கூறியவுடன் அந்த மனிதன் தலையணையைத் தாக்க முற்பட்டான். அதைக் கண்டு அவரைச் சுற்றி நிற்பவர்களே ஆச்சிரியப்படும் வண்ணம் அவன் அடிக்கும் வேகம், அடிக்கும் விதம், தலையணையைக் கிழித்தல் போன்ற செயல்கள் வியப்பை உண்டு பண்ணின. பரிசோதனையின் பின் அவ்வாறு அடித்தவரின் மனம் மிக இலேசாகிவிடுவதை உணர்ந்தார்கள். அவர்களது மனம் இதற்கு முன் இவ்வளவு இலேசாக ஒரு போதும் இருந்ததில்லை.
வன்முறை தோன்றும் போது அதை யாரை நோக்கியாவது வெளிவிடச் செய்யலாம். அப்போது அது முழுதும் தீர்ந்துபோகும். உதாரணமாக, வன்முறையைய் காற்றிடம் காற்றலாம். ஏனெனில் அது எதிர்க்காது. அதுவே மனிதரை நோக்கி வெளிபடுத்தினால் பதிலடி பெற நேரிடும். என்னால் குத்தப்படுபவனே என்னை நோக்கி குத்துவான். அவன் இன்றோ, நாளையோ அல்லது எதிர்காலத்திலோ தாக்கலாம். அவன் காத்திருக்கலாம். கண்டிப்பாக என்றாவது ஒரு நாள் கண்டிப்பாக திருப்பித்தாக்கலாம்.ஒருவரை அடிக்கும் போது, பின்னால் அதற்காக வருத்துதல் மட்டுமின்று இன்னொரு தாக்குதலுக்கு பதிலடி தரவும் தயாராகிறோம். இவ்வாறு வன்முறை ஒரு விஷ மட்டத்தை உருவாக்குகிறது.

“நமது பகைமையைய் காற்றிடம் காட்டலாம். தலையணையிடம் காட்டலாம்.
அவை நம்மை எதிர்க்காது. நமக்கு மற்றொருவரின் பகைமையைய் உருவாக்காது”.

Friday, May 29, 2009

தினம் ஒரு தகவல் - சிந்தனைகள்்

ஒரு மேலாளர், அஞ்சாமையில் சிங்கமாகவும், உழைப்பில் கழுதையாகவும், நன்றியில் தாயாகவும், வாய்ப்புக்காகக் காத்திருப்பதில் கொக்காகவும், தூரப் பார்வையில் கழுகாகவும், ஞாபக சக்தியில் யானையாகவும் இருக்க வேண்டும்.

வேலை ஒரு விளையாட்டாக மாறிவிடும் போது, வாழ்க்கையே ஒரு திருவிழாவாக மாறிவிடும். அது உங்கள் கையில் தான் இருக்கிறது.

மற்றவர்களைப் பேச விடுங்கள். இதில் அவர் பரம திருப்தி அடைவார். உங்களை மதிப்பார். அப்புறம் நீங்கள் சொல்வதை அவர் கேட்ப்பார்.

தாழாதே! எவரையும் தாழ்த்தாதே!

Thursday, May 28, 2009

தினம் ஒரு தகவல் - போரட்டம்

வாழ்க்கையில் நாம் எப்படிச் சோதனைகளை எதிர்கொள்கிறோம் என்பதைப் பொறுத்து அவை தோல்வியாகவோ அல்லது வெற்றியாகவோ அமையலாம். ஆனால் முயற்சி இல்லாமல் வெற்றி வருவதில்லை.
ஒரு உயிரியல் ஆசிரியர் தனது மாணவர்களுக்கு ஒரு கம்பளிப் புழு எப்படி வண்ணத்துப் பூச்சியாக மாறுகிறது என்று சொல்லிக் கொண்டு இருந்தார். அவர் தனது மாணவர்களிடம் ஒரு வண்ணத்துப் பூச்சி கூட்டினைக் காட்டி அடுத்த ஒரு சில மணி நேரங்களில் வண்ணத்துப் பூச்சி தனது கூட்டிலிருந்து போராடி வெளிவரப்போகிறது என்றும் ஆனால் யாரும் அதற்கு உதவக்கூடாது என்றும் கூறிவிட்டு வெளியே சென்று விட்டார்.
மாணவர்களில் ஒருவன் அதன் மேல் இரக்கப்பட்டான். தனது ஆசிரியரின் சொல்லை மீறி, அந்த வண்ணத்துப் பூச்சி தனது கூட்டிலிருந்து வெளிவர உதவுவதற்குத் தீர்மானித்தான். அந்த வண்ணத்துப் பூச்சி போராட தேவையின்றி எளிதாக வெளியே வரும் பொருட்டு அந்தக் கூட்டை உடைத்தான். ஆனால் சிறிது நேரத்திற்கு பிறகு வண்ணத்துப் பூச்சியும் இறந்து விட்டது.
இப்பொழுது அந்த மாணவன் வண்ணத்துப் பூச்சியின் இறப்பிற்கு காரணமாகி விட்டான். கூட்டிலிருந்து வெளிவரப் போராடும் போராட்டம் உண்மையில் அதனுடைய சிறகுகளை வளர்க்கவும், தன்னை பலப்படுத்திக் கொள்ளவும் உதவும் என்பது தான் இயற்கையின் சட்டம். மாணவன் அந்த வண்ணத்துப் பூச்சியயை போராட்டத்தில் இருந்து காப்பாற்றி விட்டதால், அது இறந்து விட்டது. இதே கொள்கையை நமது வாழ்விற்கும் பயன்படுத்துங்கள். போராட்டங்கள் இல்லாமல் வாழ்வில் எதுவுமே பயன்தராது.

Wednesday, May 27, 2009

தினம் ஒரு தகவல் - கல்விச் சேவை

என்றும் செய்வதிலே சிறந்த சேவை கல்விச் சேவை..
சேர்ந்தே செய்திட இப்போ கரங்கள் தேவை..
வாரி வழங்கிட வள்ளல் கரங்கள் தேவை..
தேராய் அறிவை இழுத்திட திறன் தோள்கள் தேவை..
தோணிகளாய் கல்விக் கடலில் கரை சேர்த்திட நீங்கள் தேவை..
ஏணிகளாய் ஏற்றம் கொண்டோர் எம்மிடம் இணையத் தேவை..
படிக்காதவர் இருக்கலாகாது என்றோர் சட்டம் தேவை..
இடித்துச் சொல்லி நிறைவேற்றிட மெத்தப் படித்தவர் தேவை..
கல்விப் பணிகள் செய்திட இன்னும் கற்றோர்கள் தேவை..
வெல்லும் படிப்பாக வேதனைகள் தீர்ந்திடத் தேவை..
கல்தேய்ந்திடும் எறும்பனைய கற்றவர் கூட்டம் தேவை..
சொல்லும் உயிர்ச் சொல்லாக தமிழன் உயர்ந்திடத் தேவை.. இராதாகிருட்டினக் கல்விக்கூடம் இன்னும் மலர்ந்திடத் தேவை..
இரங்கும் மனங்கள் இன்னும் அள்ளிக் கொடுத்திடத் தேவை..
இறைவனின் ஆணை என நீங்கள் இணைந்திடத் தேவை..
இன்பத் தமிழனை எங்கும் உயர்த்திட நீங்கள் என்றும் தேவை!
வாருங்கள்.. இணையுங்கள்..
கல்வி கற்பிப்போம்.. உதவுங்கள்..
என்று அனைவருக்கும் அறைகூவல் இடவும்.. அன்புத்தோழரே.. ஆனந்தரே
அன்புள்ளத்திலிருந்து ஊற்றெடுத்து வந்த இந்தக் கவிதையை உங்களுடன் பகிர்வதில் நான் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். ஒரு கை மட்டும் தட்டினால் ஓசை எழாதென்பதால் கடல் கடந்த தூரத்தில் இருந்து கொண்டே நமது தினம் ஒரு தகவலின் மூலம் அவர் கைகளை என்னோடு இணைத்து தங்கத்தமிழில் இசை பாடி ஓசை எழுப்பியுள்ளார் முனைவர் பாலு, அறிவியல் விஞ்ஞானி மற்றும் சிட்னி தமிழ் மன்றச் செயலாளர் ஐயா அவர்கள், ஆஸ்திரேலியா. ஓசையின் இனிமையோடு உங்க‌ள் அனைவ‌ரையும் இன்று ச‌ந்திப்ப‌தில் மிக்க‌ ம‌கிழ்ச்சியடைகிறேன். ந‌ம்மால் முடியும் ந‌ம்மை சுற்றி உள்ள‌வ‌ர்க‌ளை க‌ற்ற‌வ‌ர்க‌ளாக‌ மாற்றிட. வாருங்கள்.. இணையுங்கள்.. கல்வி கற்பிப்போம்.. உதவுங்கள்..

Tuesday, May 26, 2009

தினம் ஒரு தகவல் - படிப்போம் வாருங்கள்

இன்றைய சூழ்நிலையில் இயந்திரமான விஞ்ஞான உலகில் கல்லூரிப் படிப்பை முடித்து வேலையில் அமர்ந்தவுடன் அனுதினமும் படிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. ஆனால் நமது முன்னோர்கள் அல்லது பெற்றோர்கள் இன்றளவும் அனுதினமும் அலுவலக வேலையை முடித்துவிட்டு மாலை நேரங்களில் ஊர் பொது நூலகம் சென்று நூல்களை அல்லது அன்றைய செய்திகளை படிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இன்றைய சூழ்நிலையில் நமக்கு எல்லா சகல வசதிகளும் வீட்டில் உள்ள கணிப் பொறியிலேயே கிடைக்கிறது. உதாரணமாக, அனைத்து செய்தித்தாள்களும் தங்களது செய்திகளை வலைதளத்தில் இடுகிறது மற்றும் அனைத்து தமிழ்நூல்களும் மின்-புத்தகங்களாக மாறிக் கொண்டே உள்ளன. அனைத்து வசதிகளும் நாம் இருக்கும் இடத்திலேயே ஒருங்கே கிடைக்கப் பெற்றும் நம்மில் பலர் தினமும் படிக்கின்ற பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது இல்லை. நண்பர்களே! நாம் மாறுவோம்!! தினமும் குறைந்தது அரை மனி நேரமாவது நல்ல கருத்துள்ள நீதி நெறி மற்றும் சமுதாய முன்னேற்றத்திற்கான நூல்களைப் படிப்பபோம். நாம் படிப்போம். நம் நண்பர்களை படிக்க வைப்போம்!!. நமது இந்த இளைய சமுதாயத்தின் மாற்றம் நம்மிள் நாம் அனைவரும் ‘அறிவுத் தீ’ கனலாக மாறுவோம். ஓர் ஒளிமயமான சமுதாயத்தை உருவாக்குவோம். இத்தகைய ஒரு சமுதாயத்தையே மாற்றி அமைக்கக்கூடிய கல்வியை பற்றிய மற்றவர்களின் கருத்துக்களையும் ஆராய்வோம்.• அதிவீரராம பாண்டியன் தனது ‘வெற்றி வேட்கை’ என்ற நூலில் கூறியது.“கற்கை நன்றே! கற்கை நன்றே!!பிச்சை புகினும் கற்கை நன்றே!!” அதாவது பிச்சை எடுத்தாவது படிப்பினை தொடர வேண்டும். • தெய்வப்புலவர் திருவள்ளுவர் தனது திருக்குறளில் கூறுவது: யாதானும் நாடாமல் ஊராமல் என்னொருவன் சாந்துணையும் கல்லாத வாறு.விளக்கம்: கற்றவனுக்கு எல்லா நாடும் சொந்த நாடாம்; எல்லா ஊரும் சொந்த ஊராம். இதனைத் தெரிந்தும் ஒருவன் இறக்கும் வரை கூடப் படிக்காமல் இருப்பது ஏன்?. • காஞ்சிபுரத்திலே பிறந்து, தம் கல்வியால், பேச்சாற்றலால் மற்றம் எழுத்தாற்றலால் தமிழக முதல்வராக விளங்கிய அறிஞர் அண்ணாவின் வாழக்கையே ஒரு சான்று. ஒரு முறை அவர் முதல்வராக இருந்த போது புற்று நோயால் பாதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று இருந்தார். அப்பொழுது அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய மருத்துவர் ‘வெள்ளிக்கிழமை’ அறுவை சிகிச்சையை வைத்துக் கொள்ளலாமா? என்று கேட்டு இருந்தார். ஆனால் அறிஞர் அண்ணாவே இரண்டு நாட்கள் தள்ளிப் போட கேட்டுக் கொண்டார். காரணம், “நான் ஒரு புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறேன். இன்னும் இரண்டு நாட்கள் கிடைத்தால் அதனை நான் முழுமையாக வாசித்து விடுவேன்” என்று சொன்னார். • சிறுகூடல் என்னும் கிராமத்தில் பிறந்து, எட்டாம் வகுப்பு வரை மட்டுமே பள்ளிப் படிப்பை படித்தவர் கவியரசு கண்ணதாசன். இறக்கும் வரையிலும் விடாது பல்வோறு நூல்களைக் கற்று புலமை பெற்றவர். எட்டாம் வகுப்பு மட்டுமே படித்த இவர் அரசியல், ஆன்மீகம், மதம் பற்றிய ஆய்வு, நாடகம், இலக்கியம், சினிமாத்துறை என் பல துறையிலும் தனது முத்திரையைய் பதித்தவர். “இது போன்று எத்தனையோ உதாரணங்களை கூறலாம். வாருங்கள் நண்பர்களே தினமும் படிப்போம். புதிய சகாப்தம் படைப்போம்”.

Monday, May 25, 2009

தினம் ஒரு தகவல் - பிறரைப் பற்றி எண்ணுதல்

ஒரு நாள் பத்து வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் ஐஸ் கிரீம் கடைக்குச் சென்றான். ஒரு இருக்கையில் உட்கார்ந்தான். ‘ஐஸ் கிரீம் கோன் எவ்வளவு?’ என்று கடையில் உள்ள பணிப்பெண்ணிடம் கேட்டான். அவள் பத்து ருபாய் என்றாள். தன் கையில் இருந்த சில்லரைக்காசுகளை எண்ணத் தொடங்கினான். பிறகு அவன் ‘ஒரு சிறிய அளவு ஐஸ் கிரீம் எவ்வளவு?’ என்று கேட்டான். அவள் பொறுமையிழந்து “எட்டு ரூபாய்” என்று பதிலளித்தாள். அந்தச் சிறுவன் ‘எனக்கு ஒரு சிறிய ஐஸ் கிரீம் கப் வேண்டும்’ என்றான். அவனுக்கு ஐஸ் கிரீம் கிடைத்தது, தொகைக்கான சீட்டும் கிடைத்தது. பிறகு, பணம் கொடுத்துவிட்டு வெளியேறினான். அந்த வெற்றுத்தட்டை எடுக்க வந்த பணிப்பெண், மனமுருகிப் போனாள். அந்தத் தட்டுக்கு அடியில் ஒரு ரூபாய் நாணயம் அந்தப் பெண்ணின் சேவைக்காக வைக்கப்பட்டிருந்தது. அந்த சிறுவன் ஐஸ் கிரீமை வாங்குவதற்கு முன்னால் அந்தப் பெண்ணின் சேவைக்கு ஊதியம் கொடுக்க வேண்டும் என்று எண்ணி இருந்திருக்கிறான். அவன் தனது உணர்வையும், அக்கறையையும் காட்டி விட்டான். தான் தன்னைப் பற்றி எண்ணுவதற்கு முன்னால் ‘பிறரைப் பற்றி’ எண்ணியிருந்திருக்கிறான்.
நாம் எல்லோரும் அந்தச் சிறுவனைப் போல் எண்ணினால், நாம் வாழ்வதற்குரிய மகத்தான இடத்தைப் பெறுவோம். அக்கறையையும், பண்பட்ட தன்மையையும் காட்டுங்கள். பிறரைப் பற்றி எண்ணுதல் என்பது ஒரு அக்கறையான மனப்பாங்கைக் காட்டும்.

தினம் ஒரு தகவல் - ஞானியின் பொறுமை

கங்கை ஆற்றில் குளித்துவிட்டு கரையேறிய ஞானி ஒருவர் மீது வெற்றிலை பாக்கு எச்சிலை துப்பினான் முரடன் ஒருவன். ஞானி வருத்தமின்றி மீண்டும் கங்கையில் நீராடி கரையேறினார். மீண்டும் துப்பினான். இவ்வாறு ஒருமுறை இரண்டு முறை அல்ல நூறு முறை துப்பினான். ஞானிக்கு கோபமோ, துயரமோ துளி கூட இல்லை. அவர் நூறு முறை நீராடினார். முரடன் மனம் வருந்தி ஞானியின் காலில் விழப்போனான். ஞானி தடுத்தார். “முரடனே... நானல்லவா உன்னை வணங்க வேண்டும். ஒரே நாளில் இந்த புனித கங்கையில் நூறு முறை நீராடுவது நடக்கக் கூடிய காரியமா? உன்னால்தான் அது முடிந்தது. உனக்கு நான் தான் மிகவும் நன்றி சொல்ல கடமைப் பட்டிருக்கிறேன்” என்றார் ஞானி.“சுவாமி… என்னை மன்னிக்க வேண்டும். இந்த ஊரில் உள்ள ஒரு செல்வர் தங்கள் புகழைப் பொறுக்காது என்னைத் தூண்டிவிட்டார். நீங்கள் கோபம் வந்து என்னைத் திட்டுவீர்கள் திட்டினால் உங்களை கட்டிப் பிடித்து மண்ணில் புரண்டால் உங்கள் பெயர் கெடும். அப்படி நடந்தால் பொன் தருகிறேன் என்றார் செல்வந்தர். அந்தப் பொன்னுக்கு ஆசைப்பட்டு இப்படி நடந்து கொண்டு விட்டேன்” என்று கூறிக் குறுகி நின்றான் முரடன்.ஞானியின் பதில்… “முரடனே, இது எனக்கு முன்னாலே தெரியாமல் போய்விட்டதே! என்னால் உனக்கு ஒரு பொன் கிடைக்கும் என்று எனக்குத் தெரிந்திருந்தால் உன்னை கட்டிப் புரண்டு கூட சண்டைப் போட்டிருந்திருப்பேன்” என்றார் ஞானி. ஞானிகள் “துன்பத்திற்கு துன்பப் பட மாட்டார்கள்”.